அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், பிப்ரவரி 22, 2012

கேப்டனை மாற்ற வேண்டிய தருணம்: கங்குலி


புது தில்லி, பிப்.21: இந்திய கிரிக்கெட் அணியில் 3 விதமான போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 சுழற்சிமுறையில் வீரர்களை மாற்றியது, பாரபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் தோனி சிக்கியுள்ள நிலையில், கங்குலி மேலும் கூறியது:
 டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி என 3 போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது தொடர்பாக தேர்வுக்குழுவினர் முடிவெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்றார்.
 சுழற்சிமுறையில் வீரர்களை களமிறக்கும் தோனியின் முடிவு குறித்துப் பேசிய அவர், எப்போதுமே 11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக இருக்கும் வகையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது. ஆஸ்திரேலியாவில்கூட 11 வீரர்களும் மிகச்சிறந்த பீல்டர்கள் என்றுகூற முடியாது. பீல்டிங் முக்கியமானது. அதேபோல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ரன் குவிப்பதும் முக்கியமானது.
 தோனி சம பலம் வாய்ந்த அணியையே பெற்றுள்ளார். அதனால் அவர் வீரர்களால் சரியாக பீல்டிங் செய்ய முடியாததால் சுழற்சி முறையை கடைப்பிடித்ததாகக் கூறி தப்பித்துவிட முடியாது. சராசரியாக 15 ரன்கள் மட்டுமே அடிக்கும் ஒரு வீரர் சிறப்பாக பீல்டிங் செய்கிறார் என்பதற்காக அவரை அணியில் வைத்து எதைச் சாதிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். இதேபோல் நீண்ட காலமாக மோசமாக விளையாடி வரும் வீரர்களை அணியில் வைத்திருக்கக்கூடாது. அப்படிப்பட்ட வீரர்களை, மற்ற வீரர்களைவிட திறமையான வீரர்கள் என எல்லா கேப்டன்களுமே நினைக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒரு வீரர் சரியாக விளையாடாதபட்சத்தில் அவர் திறமையானவர் என்பதற்காக நீண்ட நாள்கள் அணியில் வைத்திருக்கக்கூடாது.
 2015 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் தோனி. ஆனால் ரெய்னாவோ இப்போதே சரியாக விளையாடவில்லை. ரெய்னா தன்னை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் 2015 உலகக் கோப்பையில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்றார் கங்குலி.

கருத்துகள் இல்லை:

Photobucket