அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், டிசம்பர் 26, 2011

2012 தேசிய கணித ஆண்டு: மன்மோகன் சிங் அறிவிப்பு

2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக போற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். 

சென்னை பல்கலைகழக மண்டபத்தில் கணிதமேதை ராமானுஜரின் 125 ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடங்கியது. 


இதில் கலந்துகொண்டு ராமானுஜர் உருவம் பொறித்த நினைவு தபால் தலையும், ராமானுஜர் எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.

திங்கள், நவம்பர் 14, 2011

ஷூக்களை கழற்றி சென்று ஆய்வு : நியுயார்க் விமான நிலையத்தில், கலாமிடம் 2 முறை சோதனை!

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம், நியுயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை சோதனை நடத்தி அவமதிப்பு

வெள்ளி, நவம்பர் 11, 2011

ரஜினியைச் சந்தித்தது மத்திய அரசு அதிகாரிகள் குழு!

சென்னை, நவ. 11-
Central Govt officials Meet Rajini for Ad - Tamilnadu News Headlines in Tamil

குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்பாக, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

உறவு மேம்பட இந்தியா - பாகிஸ்தான் உறுதி

அட்டு (மாலத்தீவு), நவ.10: உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதிபூண்டுள்ளன. "சார்க்' மாநாட்டில் நடைபெற்ற பிரதமர் மன்மோகன் சிங் - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி சந்திப்பின் போது இந்த உறுதி மேற்கொள்ளப்பட்டது.

வியாழன், நவம்பர் 10, 2011

இந்தியா அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்


புதுடில்லி: டில்லி டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய சச்சின், லட்சுமண் அரைசதம் கடந்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

புதன், நவம்பர் 09, 2011

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர்​; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை!

குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக் கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படு கொலைகள் ஒவ்வொன் றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ் ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய் தது.
குஜராத்தில் அகம தாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத் தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்று மாலத்தீவு செ‌ல்‌கிறா‌ர் மன்மோகன் சிங்

சா‌ர்‌க் உ‌‌ச்‌சி மாந‌ா‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று மலா‌த்‌தீவு செ‌ல்‌கிறா‌ர்.



17வது சார்க் உச்சி மாநாடு நாளை முதல் 2 நாட்கள் மாலத்தீவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலத்தீவிற்கு புறப்பட்டு செல்கிறார். 

ஜெயலலிதாவிடம் 775 கேள்விகள் பாக்கியுள்ளன– வழக்கறிஞர்


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்பதற்கு இன்னும் 775 கேள்விகள் பாக்கி உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.

டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் ஆதரவு வாபஸ்: மமதா

புதுதில்லி, நவ.9: டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திங்கள், நவம்பர் 07, 2011

காற்றழுத்தம் வலுவிழந்தது- மழை குறைந்தது- வெயில் அடிக்க ஆரம்பித்தது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாட்களாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது சற்று மெலிந்த நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், விழுப்புரத்தில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கள்ளகுறிச்சியில் 6 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சீபுரம், தேவக்கோட்டை ஆகிய பகுதியில் தலா 5 செ.மீ. மழையும், சென்னை விமானநிலையம், பொன்னேரி, சோழவரம், கடலூர், செய்யார், தர்மபுரி உள்ளிட்ட பகுதியில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தமட்டில், நேற்று முதல் மழை காணப்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான தூறல் மழை காணப்பட்டது.

இருப்பினும் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

அதேபோல காவிரி டெல்டாப் பகுதிகளிலும், வைகை பாசனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை, வைகை அணைக்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து காணப்படுகிறது. வைகை அணையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழையில் இதுவரை இயல்பை விட கூடுதலாகவே மழை கிடைத்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், முதல் கட்ட மழையிலேயே தமிழகத்தின் கிட்டத்தட்ட அத்தனை சாலைகளுமே சேதமடைந்து மக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளன. அடுத்த மழை வருவதற்குள் சேதமடைந்த சாலைகளை ஓரளவேனும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திங்கள், அக்டோபர் 31, 2011

கன்னியாகுமரி அருகே புயல்

 வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே நகர்ந்திருப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழைக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை தொடரும்: இலங்கையில் இருந்து ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாள்களாக நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும். உள் தமிழகம், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் மற்றும் இரவு நேரங்களில் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில்... திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் பலத்த மழையால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நீரில் மூழ்கியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 100 அடியைத் தாண்டியது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.
கடலில் மூழ்கிய படகு: ராமேஸ்வரம் கடல் பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் சிக்கி விசைப்படகு மூழ்கியது.
அந்தப் படகில் இருந்த மீனவர்கள் அலெக்ஸ், தால்சன், ரீகன், மெத்தன் ஆகிய 4 பேரும் மிதவை உதவியுடன் நடுக்கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவ் வழியாக மீன் பிடித்து வந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள், உயிருக்குப் போராடிய 4 மீனவர்களையும் மீட்டு, ராமேஸ்வரம் கரைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தனர். கடலில் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மலை ரயில் பாதையில்... குன்னூரில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவுகளும், மரங்கள் வேரோடு விழும் சம்பவங்களும் தொடர்கின்றன. குன்னூரில் இருந்து உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்ட மலை ரயில், வெலிங்டன் அருவங்காடு இடையே சென்றபோது, மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதன் ஓட்டுநருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள், ரயில் பாதையில் விழுந்து கிடந்த மண் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பணிகள் முடிவடைந்த பின்னர், ஒரு மணி நேரம் தாமதமாக உதகைக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில் 80 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பிற இடங்களில் பதிவான மழையின் அளவு (மில்லி மீட்டரில்): பரங்கிப்பேட்டை, அம்பாசமுத்திரம், மணியாச்சி, பெரியகுளம், தாராபுரம் 70, பூந்தமல்லி, மணிமுத்தாறு, கோத்தகிரி, சோழவந்தான், மேட்டுப்பாளையம், நத்தம் 60, மாமல்லபுரம், உத்திரமேரூர், தாமரைப்பாக்கம், கடலூர், சீர்காழி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), நிலக்கோட்டை 50, கல்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு, பொன்னேரி, திருவாரூர், கொள்ளிடம் 40, சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், திருவள்ளூர், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், செஞ்சி, திருவையாறு, கொடைவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி, மேலூர், கொடைக்கானல் 30 என பரவலாக மழை பெய்தது.

மண் சரிவு

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பழனி மலையில் யானைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள், வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. சென்னை உள்பட தமிழகத்தில் தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.

ரயில்கள் காலதாமதம்


கன மழை பெய்ததால், தென் மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்த கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், பொதிகை, பாண்டியன், சேது உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தன. ஆறு, ஏரி, கால்வாய் உள்ள பகுதிகளில் அனைத்து விரைவு ரயில்களும் வேகம் குறைவாக, 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவின் தொடர் வெற்றி தொடருமா?


கொல்கத்தா, அக்.28   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  நாளை (அக்.29) நடக்கிறது.  இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற முனைப்புடன் உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி என அனைத்து போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது. ஒரு போட்டியில்கூட வெற்றி பெற முடியவில்லை. அதுபோல் இங்கிலாந்து அணியை பழிதீர்க்கும் வகையில் தற்போது இந்தியா அனைத்து ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளை நடைபெறும் 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் காம்பீர் விளையாடவில்லை. அவருக்கு பதில் யூசுப் பதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வலுவாக உள்ளது. 5 ஒருநாள் போட்டியிலும் இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இதன் மூலம் இங்கிலாந்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சரிசெய்து அணியின் கவுரவத்தை நிலைநிறுத்தி விட்டனர்.
20 ஓவர் போட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை நியோ ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
20 ஓவர் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

திங்கள், அக்டோபர் 24, 2011

இன்று கனிமொழி மனு: ஜாமீன் கிடைக்குமா?





புது தில்லி, அக். 23: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கடந்த 5 மாதங்களாகச் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றத்துக்கு நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் தீபாவளிக்கு முன்பு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கனிமொழி கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. 2ஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்குப் பிறகு, ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 16-ம் தேதி அவர் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதைப் போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், கரீம் மொரானி, சுரேந்தர் பிப்பாரா உள்பட 7 பேரின் ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.
கனிமொழி பெண் என்பதாலும் அவர் தனது குழந்தையைக் கவனித்து கொள்ள வேண்டியுள்ளது என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சரத்குமார், வயதான தாயாரையும் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கரீம் மொரானி, சுரேந்தர் பிப்பாரா ஆகியோர் தங்களது வயதைக் காரணம் காட்டி ஜாமீன் கோரியுள்ளனர்.
ஆனால், இவர்கள் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்பதால் ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது சனிக்கிழமை குற்றப் பதிவு செய்யப்பட்டது.
"குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த பின்னர் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதற்கு சி.பி.ஐ. தரப்பு பதில் தாக்கல் செய்ய சில நாள்கள் ஆகும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்காக நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை.
இதனால் தீபாவளிக்கு முன்பாக கனிமொழி ஜாமீன் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தில்லியில் கருணாநிதி முகாம்


கனிமொழியைச் சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு புது தில்லிக்கு வந்தார். பிரதமர், சோனியா காந்தி, கனிமொழி ஆகியோரைச் சந்தித்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் புறப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதால் அவர் தனது தில்லிப் பயணத்தை நீட்டித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டார். திங்கள்கிழமை மாலை சென்னைக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது.

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)


[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 04:05.08 மு.ப GMT ]
துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில் வான் நகரில் 10 அடுக்கு மாடிக் கட்டடங்களும், அருகில் உள்ள எரிக்ஸ் மாவட்டத்தில் 25ல் இருந்து 30 கட்டடங்களும் இடிந்து விழுந்ததாக துணைப் பிரதமர் பெசிர் அட்டாலாய் தெரிவித்தார்.
இக்கோரச் சம்பவத்தில் 500ல் இருந்து 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு நிலநடுக்கவியல் நிறுவன இயக்குனர் முஸ்தபா எர்டிக் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர்.
எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில்,"நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, பலர் பலியாகியுள்ளனர். எனினும் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. அவசர மீட்புப் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
வான் நகரில் மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள நபர்களையும், பலியானவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள், ஜூலை 18, 2011

மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!

Karunanidhi and Stalin

அறிவாலயத்தில் கருணாநிதி - ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!! 

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே திமுகவிற்கு நேரம் சரியில்லாமல் உள்ளது. 2ஜி ஊழல் பூதாகரமாக வெடித்து ராசாவும் கனிமொழியும் திஹார் சிறையில் உள்ளனர். தயாநிதி மாறனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. 

சன்டிவி, கலைஞர் டிவி போன்றவையும் சிக்கலில் உள்ளன. இன்னொரு பக்கம் நில அபகரிப்பு வழக்கில் தினமும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காலை திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கடுப்பான கருணாநிதி தலைமையகத்தைவிட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது,

2ஜி விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்பொழுதும் கட்சியினர் புடைசூழச் செல்லும் கருணாநிதி நேற்று ஈசிஆர் ரோட்டில் உள்ள கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார். அவரது செயலாளர் கே. சண்முகநாதனும், பாதுகாவலர்கள் சிலரும் மட்டுமே அவருடன் சென்றுள்ளனர். 

குடும்ப அரசியலால் தான் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது என்று கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

புதன், ஜூலை 13, 2011

செல்போன் , டிவிடி, சிடி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி 14.5 வீதம் உயர்வு


கடந்த கால ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக
அரசுக்கு கடன் உள்ளதால் அரசுக்கு வருமானம் வரும் வகையில்

டிவிடிக்கள், சிடி, செல்போன் உ‌ள்‌‌ளி‌ட்ட பொரு‌ட்களு‌க்கு 4 வீதத்திலிருந்த வரி தற்போது 14.5 வீதமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு பொருந்தும் வகையில் மதிப்புக் கூட்டும் வரி 4 இலிருந்து 5 சதவிகிதமாக மாற்றப்படுவதாகவும் ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையல் எண்ணை ஆண்டு விற்பனை 500 கோடி ரூபாய் என்பதிலிருந்து 5 கோடி ரூபாயாக குறைத்துள்ளதுடன் பீடி, புகையிலைப் பொருட்கள் புகையிலை, மூக்குப்பொடி, சுருட்டு ஆகியற்றுக்கும் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

எல்.சி.டி.பேனல்ஸ், எல்.இ.டி.பேனல்ஸ், டிவிடிக்கள், சிடி, செல்போன், ஐ-பாடு, ஐ-போன்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மொபைல் போன் போன்றவைகளுக்கு இப்போது 4 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது 141/2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. எனவும் அர‌சி‌ன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 07, 2011

வறுமை ஒழிப்பே லட்சியம்: முதல்வர்


 தொழில் துறையில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற  எனது கனவை நனவாக்க, அனைத்து தொழில் நிறுவனங்களும் தீவிர பங்காற்ற வேண்டும் என்று தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
.
வறுமை ஒழிப்பும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதும் தனது கனவு என்றும் ஜெயலலிதா கூறினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொழில் கொள்கை காரணமாகவே தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று  நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:

எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழக அரசின் வளர்ச்சி திட்டம் தொழில் துறையில் முக்கிய பங்காற்ற  தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான திட்டமாக  இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்வாதாரத்துக்காக  தொழில் என்ற கருத்தை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில்  இந்தியா மிகுந்த வாய்ப்பு வசதிகளை கொண்ட நாடாக விளங்குகிறது.  வளர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கிறது. எனினும் இன்னமும் நம்நாட்டில் வறுமை, சமச்சீரற்ற வருமானம் ஆகியவை நிலவி வருகின்றன. வறுமை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு விஷயத்தில் தமிழ்நாட்டில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்த விஷயத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அறவே ஒழிப்பதுதான் எனது கனவாக உள்ளது. இந்த லட்சியங்களை எட்டுவதற்கு  அனைவரும் பாடுபட வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இந்த லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  இந்த கனவை நனவாக்க வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் அவசியமாகும்.

தமிழ்நாடு பாரம்பரியமாகவே தொழில் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக  உள்ளது.  பொறியியல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை உள்ளிட்ட உற்பத்தி துறையில் தமிழகம் மிகச்சிறந்த ஆதாரத்தை கொண்டதாக விளங்குகிறது.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு தொழில் மயமாக்கம்,  மத்திய அரசின் தொழில் உரிமங்களைச் சார்ந்ததாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு லைசென்ஸ் ராஜ் திட்டம்  ஒழிந்த பிறகு தொழில் வளர்ச்சியில் வேகம் அதிகரித்தது.

திங்கள், ஜூன் 27, 2011

தமிழகத்தில் புதிய முஸ்லிம் அமைச்சர் புதனன்று பதவியேற்பு.

Mohammed John
புதிதாக அமைச்சர் பதவியேற்று ஒரு வாரத்தில் மரணம் தழுவிய மரியம் பிச்சைக்குப் பதிலாக முஸ்லிம் கோட்டாவில்  ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., முகமது ஜான் புதிய அமைச்சராக புதன்கிழமை பதவியேற்கிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை + வக்ப் வாரியம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே சமயம், மரியம் பிச்சை வகித்து வந்த சுற்றுச்சூழல்த்துறை அமைச்சராக டி கே எம் சின்னையா நீடிப்பார் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படிஊரக தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக எஸ் பி வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக எம் சி சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடைத்துறை அமைச்சராக என் ஆர் சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக சி கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார்



திங்கள், மே 30, 2011

ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை-அமிதாப் தந்த அட்வைஸ்

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், வாந்தி பிரச்சினைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த மாதம் 29ம் தேதி சேர்ந்தார். அதில் குணம் ஏற்பட்டு வீடு திரும்பிய அவர் மீண்டும் 4ம் தேதி அதே மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல் பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாததால் காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு 5 தடவைக்கு மேல் ரத்தத்தை சுத்தம் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க ரஜினி குடும்பத்தினர் விரும்பினர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் ரஜினிக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவ அறிக்கை வெளியிட அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் என்ன மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரியவில்லை. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுவதாக மருத்துவமனையில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த முடியுமா? என்று டாக்டர் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

அமிதாப் அட்வைஸ்...

உலகின் மற்ற நாடுகளை விட சென்னையிலேயே சிறப்பாக இந்த சிகிச்சையை செய்ய முடியும். ஆனால் இங்கே சொந்தக்காரர்கள், ரத்த உறவுகள்தான் டோனர்களாக இருக்க முடியும் என்பதாலேயே வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் இந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரஜினியை அழைத்துச் செல்லும்படி கூறியவர் அமிதாப் பச்சன்தானாம். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமிதாப்பின் நெருங்கிய நண்பருமான அமர்சிங் இங்குதான் மாற்று சிறுநீரகங்கள் பொருத்திக் கொண்டு இப்போது நலமுடன் உள்ளார்.

இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ரஜினியை சிங்கப்பூரில் அமர்சிங் நலம் பெற்ற இதே மருத்துவமனையில் சேர்க்க லதாவுக்கு அமிதாப் அறிவுரை சொன்னதாக பிரபல ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரை காவு வாங்கிய லாரி பிடிபட்டது


திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாவுக்கு காரணமான லாரியை, ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். லாரியை பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, கடந்த 23ம் தேதி திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடைய கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு ரோட்டில் சென்ற போது முன்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.காரில் சென்ற டிரைவர் ஆனந்த உள்ளிட்ட ஆறு பேர் இலேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அமைச்சர் மரியம்பிச்சை சாவுக்கு காரணமான லாரி நிற்காமல் சென்று விட்டது. இதனால் அது சதித்திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மரியம்பிச்சையின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா, விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் மரியம்பிச்சையின் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

முதல்வர் உத்தரவிட்ட முதல் வழக்கு என்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஏ.டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம், டி.ஐ.ஜி., ஸ்ரீதர், எஸ்.பி., ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். லாரியைக் கண்டுபிடிக்க, விபத்து நடந்த அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சமயபுரத்தில் உள்ள வாகன வரிவசூல் மையத்தை கடந்து, சென்னையை நோக்கி சென்ற லாரிகளின் பட்டியல் போலீசாரால் எடுக்கப்பட்டது. அதில் தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்கேதப்பட்டியலில் கொண்டு வந்தனர். அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.

அதைப்பிடிக்க ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர். காலை குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர். 

ஆந்திரா மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் காசிம் ரகமதுல்லா என்பதும் தெரியவந்தது. அவரே லாரியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடியிலிருந்து, விஜயவாடாவுக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்றபோது தான் பாடாலூர் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டதும் ஏதும் பிரச்னை ஏற்படுமோ என்று நினைத்த லாரி உரிமையாளர் காசிம் ரகமதுல்லா, அதை சமர்த்தியமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு ஓட்டிச் சென்றுவிட்டார்.அங்கு ஜிப்சத்தை இறக்கிவிட்டு, லாரியை மறைத்து வைக்க கொல்கத்தா செல்லும் வழியில், ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் அந்த டாரஸ் லாரியை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட லாரியை பெரம்பலூர் கொண்டு வரவும், லாரியின் உரிமையாளரும், டிரைவருமான காசிம் ரகமதுல்லாவையும் கைது செய்து, பெரம்பலூர் கொண்டு வர சி.பி.சி.ஐ.டி., போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் சாவுக்கு காரணமான லாரி பிடிபடாமல் இருந்ததால், விபத்தில் சதி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. தற்போது லாரி பிடிபட்டுள்ளதால், அந்த சந்தேகத்துக்கான விடை விரைவில் தெரியவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சனி, மே 28, 2011

பாஜகவில் மோதல்-அருண் ஜேட்லி மீது சுஷ்மா சுவராஜ் தாக்கு

Sushma Swaraj
டெல்லி: பாஜக மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி இடையே இதுவரை நடந்து வந்த பனிப் போர் வெளிப்படையாக வெடித்துள்ளது.

கர்நாடக அரசியலில் முதல்வர் எதியூரப்பாவுக்கு பெரும் தலைவலியாக உள்ள ரெட்டி சகோதரர்களை சுஷ்மா சுவராஜ் தான் வளர்த்து வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டது கர்நாடக மாநிலம் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் தான்.

அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார் சுஷ்மா சுவராஜ். அப்போது அவருக்கு ரெட்டி சகோதரர்கள் நெருக்கமாயினர். இதையடுத்து சுஷ்மா இருக்கும் தைரியத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு சிக்கல்களை இந்த சகோதரர்கள் உருவாக்கி வந்தனர்.

இப்போது கர்நாடக பாஜக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு அருண் ஜேட்லி வசம் வந்துவிட்டது. இதனால் சுஷ்மா-ஜேட்லி இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், ரெட்டி சகோதரர்களை நான் தான் ஆதரித்து வருவதாக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜேட்லி மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார் சுஷ்மா.

எதியூரப்பா அமைச்சரவையில் உள்ள இரு ரெட்டி சகோதரர்களையும், அவர்களது ஆதரவாளரான ஸ்ரீராமுலுவையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கூட எனக்குக் கவலையில்லை. அதை நான் எதி்ர்க்கவும் மாட்டேன் என்றார் சுஷ்மா.

இதைத் தொடர்ந்து சில தொலைக் காட்சிகளுக்கும் அவுட்லுக் வார இதழுக்கும் சுஷ்மா அளித்துள்ள பேட்டியில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களை கர்நாடக பாஜக விவகாரங்களை கவனிக்கும் அருண் ஜெட்லி தான் வளர்த்துவிட்டு வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை அமைச்சரவையில் சேர்க்க நான் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால், அரசியல் காரணங்களைக் கூறி அவர்களை அமைச்சரவையில் சேர்த்தனர். அப்போது கர்நாடக விவகாரங்களை கவனித்து வந்தது ஜேட்லி தான்.

ஜேட்லி, எதியூரப்பா, வெங்கையா நாயுடு, அனந்த்குமார் ஆகிய மூத்த தலைவர்கள் தான் அந்த முடிவை எடுத்தனர். 3 ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று கூறியும் அதை மீறி அவர்களை சேர்த்தனர். அவர்களுக்கு என்ன அரசியல் நெருக்கடி இருந்ததோ தெரியவில்லை என்று கூறியுள்ளார் சுஷ்மா.

கர்நாடக பாஜக கட்சிக்கு ரெட்டி சகோதரர்கள் ரூ. 160 கோடி தந்ததைத் தான் அவர் அரசியல் நெருக்கடி என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது. பாஜக கூட்டத்திலும் சுஷ்மா இந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளார். ரெட்டி சகோதரர்களிடம் இவ்வளவு பணத்தை வாங்கினால் அதற்கான விலையை நாம் தந்து தானே ஆக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று சுஷ்மா கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரங்க ஊழல் விவகாரத்தில் பெயர் கெட்டுப் போன ரெட்டி சகோதரர்களுக்கு சுஷ்மா தான் 
தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார் என்று அவ்வப்போது மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருவதற்கு ஜேட்லி தான் காரணம் என்று சுஷ்மா காரணமாகத் தெரிகிறது. பாஜகவின் உயர் மட்டத் தலைவர் பதவிக்கு தான் போட்டியாக உள்ளதால், தனது பெயரை ஜேட்லி கெடுக்க முயல்வதாக சுஷ்மா கருதுவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்த்தது எனது சொந்த முடிவு என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா விளக்கமளித்துள்ளார். இதில் சுஷ்மாவோ அல்லது வேறு யாருமோ தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.

வியாழன், மே 12, 2011

பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம் : டீசல், சமையல் காஸ் தப்பியது



புதுடில்லி : ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு, இந்த வாரத்தில் எந்த நேரத்திலும் வரலாம். இருப்பினும், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்போதைக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலை காரணம் காட்டி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிவந்தன. விலையை உயர்த்தாததால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வந்தன. பெட்ரோல் விலையை சர்வதேச விலைக்கு நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த புதிய முறை மூலம், ஆறு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பெட்ரோல் விலையை உயர்த்துவது பற்றி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசின் ஆலோசனையை எதிர்பார்த்தன.

மேலும், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை பொறுத்தமட்டில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருந்ததால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.மேற்கு வங்கத்தில் நேற்று கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இத்துடன் ஓட்டுப்பதிவு முடிந்ததால், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளையோ, நாளை மறுநாளோ அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.

டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது பற்றி முடிவு செய்வதற்காக அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு இன்று கூடுவதாக இருந்தது. ஆனால், இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எந்த தேதியில் இந்த கூட்டம் நடைபெறும் என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவிக்கவில்லை. அமைச்சர்கள் குழு கூடி, டீசல் விலையை லிட்டருக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வரையும், காஸ் சிலிண்டர் விலையைரூ.25 வரையும் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.பெட்ரோல் விலை: பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்படும் என தெரிகிறது. சர்வதேச விலையோடு ஒப்பிடும் போது, ரூ.8.50 விலை உயர்த்தவேண்டி வருவதாகவும், இருப்பினும் இந்த சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் ஏற்றுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

புதன், மே 04, 2011

கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு, கருணாநிதி தீவிர ஆலோசனை

Kanimozhi

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.


இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.

இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு:

இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.

மொரீசியஸ் தீவில் விசாரணை:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் கோடிக்கணக்கில் மொரீசியஸ் உள்பட பல வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்துகிறது.

இது தொடர்பான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு 15ம் தேதி மொரீசியஸ் செல்கிறது.

சினியுக் இயக்குநர் முன் ஜாமீன் மனு:

இந் நிலையில் சினியுக் இயக்குநர் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சாஹித் பல்வாவின் டி.பி. ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணம் சினியுக் நிறுவனம் வழியாகக் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளை மறுதினம் இவரும் கனிமொழியும், சரத் குமாரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர்களை சிபிஐ கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி கரீம் மொரானி மனு தாக்கல் செய்துள்ளார்.

கத்திரி வெயிலில் இருந்து காத்துக்கொள்வோம்

Sun

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று ( 4 – ம் தேதி) தொடங்கி 
வரும் 29 - ம் தேதி வரை நீடிக்கவுள்ளது.


அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.

இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை 
வழிபடுகின்றனர்.

சூரிய பகவான்

சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் 
உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை 
அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல்நாளில் அசுவினியில் 
நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் 
தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில் 
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் 
அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான். இவர் நெருப்பு ரூபமாய் 
காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் 
பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை 
உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை 
அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார்.

இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க 
வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும், விடாது மழை 
பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.

காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர், 
அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை 
சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார். அப்போது 
அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..

அக்னி ரூபானை வழிபடுவோம்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும் 
சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட 
வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

ஐபிஎல்லில் மீண்டும் கங்குலி! புனே அணிக்காக விளையாடுகிறார்



ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாடவுள்ளார் கங்குலி.


இந்த முறை ஐபிஎல் ஏலத்தின் போது எல்லா அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார் சௌரவ் கங்குலி. அவருடைய ஐபிஎல் சகாப்தம் முடிந்துவிட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனால் தற்போது மீண்டும் கங்குலிக்கு ஐபிஎல்லில் விளையாடுவதற்கான அழைப்பு வந்துள்ளது. புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்கள் முன்னாள் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவரான கங்குலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அணியின் சார்பில் கங்குலியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். காயமடைந்த ஆசிஷ் நெஹ்ராவுக்கு பதிலாக கங்குலி சேர்க்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இன்று இரவே அவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்றும், இன்றே அவர் அணியில் இணைவார், யுவராஜ் சிங் தலைமையில் கங்குலி விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஐபிஎல் சீஸன் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்து துவண்டு போயிருக்கு புனே அணிக்கு அனுபவம் மிக்க கங்குலி சில வழிகாட்டுதல்களைத் தருவார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சனி, ஏப்ரல் 30, 2011

பனீர் வெஜிடபிள் பிரியாணி

Paneer Veg Biryani - Cooking Recipes in Tamil
பன்னீரில் உள்ள புரதச்சத்து அனைத்து வயதினருக்கும் மிகவும் நல்லது. சுவையுள்ளதும் கூட. பன்னீரை விதவிதமாய் சமைத்து சாப்பிட்டிருப்போம்.. ஆனா, பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? செஞ்சு பாருங்க..சூப்பரா இருக்கும்! சுவையும் மணமும் நிறைந்துள்ளதால் சைவ விருந்தாளிகளுக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து கொடுத்த சந்தோஷம் நிலவும்...

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1
வறுத்து அரைக்க:
கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.
* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.



Photobucket