அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், அக்டோபர் 31, 2011

கன்னியாகுமரி அருகே புயல்

 வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே நகர்ந்திருப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழைக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை தொடரும்: இலங்கையில் இருந்து ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாள்களாக நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும். உள் தமிழகம், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் மற்றும் இரவு நேரங்களில் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில்... திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் பலத்த மழையால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நீரில் மூழ்கியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 100 அடியைத் தாண்டியது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.
கடலில் மூழ்கிய படகு: ராமேஸ்வரம் கடல் பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் சிக்கி விசைப்படகு மூழ்கியது.
அந்தப் படகில் இருந்த மீனவர்கள் அலெக்ஸ், தால்சன், ரீகன், மெத்தன் ஆகிய 4 பேரும் மிதவை உதவியுடன் நடுக்கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவ் வழியாக மீன் பிடித்து வந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள், உயிருக்குப் போராடிய 4 மீனவர்களையும் மீட்டு, ராமேஸ்வரம் கரைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தனர். கடலில் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மலை ரயில் பாதையில்... குன்னூரில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவுகளும், மரங்கள் வேரோடு விழும் சம்பவங்களும் தொடர்கின்றன. குன்னூரில் இருந்து உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்ட மலை ரயில், வெலிங்டன் அருவங்காடு இடையே சென்றபோது, மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதன் ஓட்டுநருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள், ரயில் பாதையில் விழுந்து கிடந்த மண் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பணிகள் முடிவடைந்த பின்னர், ஒரு மணி நேரம் தாமதமாக உதகைக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில் 80 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பிற இடங்களில் பதிவான மழையின் அளவு (மில்லி மீட்டரில்): பரங்கிப்பேட்டை, அம்பாசமுத்திரம், மணியாச்சி, பெரியகுளம், தாராபுரம் 70, பூந்தமல்லி, மணிமுத்தாறு, கோத்தகிரி, சோழவந்தான், மேட்டுப்பாளையம், நத்தம் 60, மாமல்லபுரம், உத்திரமேரூர், தாமரைப்பாக்கம், கடலூர், சீர்காழி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), நிலக்கோட்டை 50, கல்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு, பொன்னேரி, திருவாரூர், கொள்ளிடம் 40, சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், திருவள்ளூர், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், செஞ்சி, திருவையாறு, கொடைவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி, மேலூர், கொடைக்கானல் 30 என பரவலாக மழை பெய்தது.

மண் சரிவு

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பழனி மலையில் யானைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள், வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. சென்னை உள்பட தமிழகத்தில் தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.

ரயில்கள் காலதாமதம்


கன மழை பெய்ததால், தென் மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்த கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், பொதிகை, பாண்டியன், சேது உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தன. ஆறு, ஏரி, கால்வாய் உள்ள பகுதிகளில் அனைத்து விரைவு ரயில்களும் வேகம் குறைவாக, 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவின் தொடர் வெற்றி தொடருமா?


கொல்கத்தா, அக்.28   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  நாளை (அக்.29) நடக்கிறது.  இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற முனைப்புடன் உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி என அனைத்து போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது. ஒரு போட்டியில்கூட வெற்றி பெற முடியவில்லை. அதுபோல் இங்கிலாந்து அணியை பழிதீர்க்கும் வகையில் தற்போது இந்தியா அனைத்து ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளை நடைபெறும் 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் காம்பீர் விளையாடவில்லை. அவருக்கு பதில் யூசுப் பதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வலுவாக உள்ளது. 5 ஒருநாள் போட்டியிலும் இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இதன் மூலம் இங்கிலாந்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சரிசெய்து அணியின் கவுரவத்தை நிலைநிறுத்தி விட்டனர்.
20 ஓவர் போட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை நியோ ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
20 ஓவர் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

திங்கள், அக்டோபர் 24, 2011

இன்று கனிமொழி மனு: ஜாமீன் கிடைக்குமா?





புது தில்லி, அக். 23: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கடந்த 5 மாதங்களாகச் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றத்துக்கு நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் தீபாவளிக்கு முன்பு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கனிமொழி கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. 2ஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்குப் பிறகு, ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 16-ம் தேதி அவர் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதைப் போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், கரீம் மொரானி, சுரேந்தர் பிப்பாரா உள்பட 7 பேரின் ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.
கனிமொழி பெண் என்பதாலும் அவர் தனது குழந்தையைக் கவனித்து கொள்ள வேண்டியுள்ளது என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சரத்குமார், வயதான தாயாரையும் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கரீம் மொரானி, சுரேந்தர் பிப்பாரா ஆகியோர் தங்களது வயதைக் காரணம் காட்டி ஜாமீன் கோரியுள்ளனர்.
ஆனால், இவர்கள் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்பதால் ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது சனிக்கிழமை குற்றப் பதிவு செய்யப்பட்டது.
"குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த பின்னர் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதற்கு சி.பி.ஐ. தரப்பு பதில் தாக்கல் செய்ய சில நாள்கள் ஆகும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்காக நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை.
இதனால் தீபாவளிக்கு முன்பாக கனிமொழி ஜாமீன் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தில்லியில் கருணாநிதி முகாம்


கனிமொழியைச் சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு புது தில்லிக்கு வந்தார். பிரதமர், சோனியா காந்தி, கனிமொழி ஆகியோரைச் சந்தித்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் புறப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதால் அவர் தனது தில்லிப் பயணத்தை நீட்டித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டார். திங்கள்கிழமை மாலை சென்னைக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது.

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)


[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 04:05.08 மு.ப GMT ]
துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில் வான் நகரில் 10 அடுக்கு மாடிக் கட்டடங்களும், அருகில் உள்ள எரிக்ஸ் மாவட்டத்தில் 25ல் இருந்து 30 கட்டடங்களும் இடிந்து விழுந்ததாக துணைப் பிரதமர் பெசிர் அட்டாலாய் தெரிவித்தார்.
இக்கோரச் சம்பவத்தில் 500ல் இருந்து 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு நிலநடுக்கவியல் நிறுவன இயக்குனர் முஸ்தபா எர்டிக் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர்.
எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில்,"நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, பலர் பலியாகியுள்ளனர். எனினும் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. அவசர மீட்புப் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
வான் நகரில் மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள நபர்களையும், பலியானவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Photobucket