அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், மே 30, 2011

ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை-அமிதாப் தந்த அட்வைஸ்

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், வாந்தி பிரச்சினைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த மாதம் 29ம் தேதி சேர்ந்தார். அதில் குணம் ஏற்பட்டு வீடு திரும்பிய அவர் மீண்டும் 4ம் தேதி அதே மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல் பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாததால் காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு 5 தடவைக்கு மேல் ரத்தத்தை சுத்தம் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க ரஜினி குடும்பத்தினர் விரும்பினர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் ரஜினிக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவ அறிக்கை வெளியிட அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் என்ன மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரியவில்லை. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுவதாக மருத்துவமனையில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த முடியுமா? என்று டாக்டர் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

அமிதாப் அட்வைஸ்...

உலகின் மற்ற நாடுகளை விட சென்னையிலேயே சிறப்பாக இந்த சிகிச்சையை செய்ய முடியும். ஆனால் இங்கே சொந்தக்காரர்கள், ரத்த உறவுகள்தான் டோனர்களாக இருக்க முடியும் என்பதாலேயே வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் இந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரஜினியை அழைத்துச் செல்லும்படி கூறியவர் அமிதாப் பச்சன்தானாம். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமிதாப்பின் நெருங்கிய நண்பருமான அமர்சிங் இங்குதான் மாற்று சிறுநீரகங்கள் பொருத்திக் கொண்டு இப்போது நலமுடன் உள்ளார்.

இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ரஜினியை சிங்கப்பூரில் அமர்சிங் நலம் பெற்ற இதே மருத்துவமனையில் சேர்க்க லதாவுக்கு அமிதாப் அறிவுரை சொன்னதாக பிரபல ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரை காவு வாங்கிய லாரி பிடிபட்டது


திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாவுக்கு காரணமான லாரியை, ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். லாரியை பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, கடந்த 23ம் தேதி திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடைய கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு ரோட்டில் சென்ற போது முன்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.காரில் சென்ற டிரைவர் ஆனந்த உள்ளிட்ட ஆறு பேர் இலேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அமைச்சர் மரியம்பிச்சை சாவுக்கு காரணமான லாரி நிற்காமல் சென்று விட்டது. இதனால் அது சதித்திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மரியம்பிச்சையின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா, விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் மரியம்பிச்சையின் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

முதல்வர் உத்தரவிட்ட முதல் வழக்கு என்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஏ.டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம், டி.ஐ.ஜி., ஸ்ரீதர், எஸ்.பி., ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். லாரியைக் கண்டுபிடிக்க, விபத்து நடந்த அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சமயபுரத்தில் உள்ள வாகன வரிவசூல் மையத்தை கடந்து, சென்னையை நோக்கி சென்ற லாரிகளின் பட்டியல் போலீசாரால் எடுக்கப்பட்டது. அதில் தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்கேதப்பட்டியலில் கொண்டு வந்தனர். அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.

அதைப்பிடிக்க ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர். காலை குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர். 

ஆந்திரா மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் காசிம் ரகமதுல்லா என்பதும் தெரியவந்தது. அவரே லாரியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடியிலிருந்து, விஜயவாடாவுக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்றபோது தான் பாடாலூர் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டதும் ஏதும் பிரச்னை ஏற்படுமோ என்று நினைத்த லாரி உரிமையாளர் காசிம் ரகமதுல்லா, அதை சமர்த்தியமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு ஓட்டிச் சென்றுவிட்டார்.அங்கு ஜிப்சத்தை இறக்கிவிட்டு, லாரியை மறைத்து வைக்க கொல்கத்தா செல்லும் வழியில், ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் அந்த டாரஸ் லாரியை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட லாரியை பெரம்பலூர் கொண்டு வரவும், லாரியின் உரிமையாளரும், டிரைவருமான காசிம் ரகமதுல்லாவையும் கைது செய்து, பெரம்பலூர் கொண்டு வர சி.பி.சி.ஐ.டி., போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் சாவுக்கு காரணமான லாரி பிடிபடாமல் இருந்ததால், விபத்தில் சதி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. தற்போது லாரி பிடிபட்டுள்ளதால், அந்த சந்தேகத்துக்கான விடை விரைவில் தெரியவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சனி, மே 28, 2011

பாஜகவில் மோதல்-அருண் ஜேட்லி மீது சுஷ்மா சுவராஜ் தாக்கு

Sushma Swaraj
டெல்லி: பாஜக மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி இடையே இதுவரை நடந்து வந்த பனிப் போர் வெளிப்படையாக வெடித்துள்ளது.

கர்நாடக அரசியலில் முதல்வர் எதியூரப்பாவுக்கு பெரும் தலைவலியாக உள்ள ரெட்டி சகோதரர்களை சுஷ்மா சுவராஜ் தான் வளர்த்து வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டது கர்நாடக மாநிலம் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் தான்.

அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார் சுஷ்மா சுவராஜ். அப்போது அவருக்கு ரெட்டி சகோதரர்கள் நெருக்கமாயினர். இதையடுத்து சுஷ்மா இருக்கும் தைரியத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு சிக்கல்களை இந்த சகோதரர்கள் உருவாக்கி வந்தனர்.

இப்போது கர்நாடக பாஜக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு அருண் ஜேட்லி வசம் வந்துவிட்டது. இதனால் சுஷ்மா-ஜேட்லி இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், ரெட்டி சகோதரர்களை நான் தான் ஆதரித்து வருவதாக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜேட்லி மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார் சுஷ்மா.

எதியூரப்பா அமைச்சரவையில் உள்ள இரு ரெட்டி சகோதரர்களையும், அவர்களது ஆதரவாளரான ஸ்ரீராமுலுவையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கூட எனக்குக் கவலையில்லை. அதை நான் எதி்ர்க்கவும் மாட்டேன் என்றார் சுஷ்மா.

இதைத் தொடர்ந்து சில தொலைக் காட்சிகளுக்கும் அவுட்லுக் வார இதழுக்கும் சுஷ்மா அளித்துள்ள பேட்டியில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களை கர்நாடக பாஜக விவகாரங்களை கவனிக்கும் அருண் ஜெட்லி தான் வளர்த்துவிட்டு வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை அமைச்சரவையில் சேர்க்க நான் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால், அரசியல் காரணங்களைக் கூறி அவர்களை அமைச்சரவையில் சேர்த்தனர். அப்போது கர்நாடக விவகாரங்களை கவனித்து வந்தது ஜேட்லி தான்.

ஜேட்லி, எதியூரப்பா, வெங்கையா நாயுடு, அனந்த்குமார் ஆகிய மூத்த தலைவர்கள் தான் அந்த முடிவை எடுத்தனர். 3 ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று கூறியும் அதை மீறி அவர்களை சேர்த்தனர். அவர்களுக்கு என்ன அரசியல் நெருக்கடி இருந்ததோ தெரியவில்லை என்று கூறியுள்ளார் சுஷ்மா.

கர்நாடக பாஜக கட்சிக்கு ரெட்டி சகோதரர்கள் ரூ. 160 கோடி தந்ததைத் தான் அவர் அரசியல் நெருக்கடி என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது. பாஜக கூட்டத்திலும் சுஷ்மா இந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளார். ரெட்டி சகோதரர்களிடம் இவ்வளவு பணத்தை வாங்கினால் அதற்கான விலையை நாம் தந்து தானே ஆக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று சுஷ்மா கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரங்க ஊழல் விவகாரத்தில் பெயர் கெட்டுப் போன ரெட்டி சகோதரர்களுக்கு சுஷ்மா தான் 
தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார் என்று அவ்வப்போது மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருவதற்கு ஜேட்லி தான் காரணம் என்று சுஷ்மா காரணமாகத் தெரிகிறது. பாஜகவின் உயர் மட்டத் தலைவர் பதவிக்கு தான் போட்டியாக உள்ளதால், தனது பெயரை ஜேட்லி கெடுக்க முயல்வதாக சுஷ்மா கருதுவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்த்தது எனது சொந்த முடிவு என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா விளக்கமளித்துள்ளார். இதில் சுஷ்மாவோ அல்லது வேறு யாருமோ தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.

வியாழன், மே 12, 2011

பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம் : டீசல், சமையல் காஸ் தப்பியது



புதுடில்லி : ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு, இந்த வாரத்தில் எந்த நேரத்திலும் வரலாம். இருப்பினும், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்போதைக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலை காரணம் காட்டி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிவந்தன. விலையை உயர்த்தாததால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வந்தன. பெட்ரோல் விலையை சர்வதேச விலைக்கு நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த புதிய முறை மூலம், ஆறு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பெட்ரோல் விலையை உயர்த்துவது பற்றி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசின் ஆலோசனையை எதிர்பார்த்தன.

மேலும், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை பொறுத்தமட்டில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருந்ததால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.மேற்கு வங்கத்தில் நேற்று கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இத்துடன் ஓட்டுப்பதிவு முடிந்ததால், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளையோ, நாளை மறுநாளோ அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.

டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது பற்றி முடிவு செய்வதற்காக அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு இன்று கூடுவதாக இருந்தது. ஆனால், இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எந்த தேதியில் இந்த கூட்டம் நடைபெறும் என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவிக்கவில்லை. அமைச்சர்கள் குழு கூடி, டீசல் விலையை லிட்டருக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வரையும், காஸ் சிலிண்டர் விலையைரூ.25 வரையும் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.பெட்ரோல் விலை: பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்படும் என தெரிகிறது. சர்வதேச விலையோடு ஒப்பிடும் போது, ரூ.8.50 விலை உயர்த்தவேண்டி வருவதாகவும், இருப்பினும் இந்த சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் ஏற்றுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

புதன், மே 04, 2011

கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு, கருணாநிதி தீவிர ஆலோசனை

Kanimozhi

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.


இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.

இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு:

இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.

மொரீசியஸ் தீவில் விசாரணை:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் கோடிக்கணக்கில் மொரீசியஸ் உள்பட பல வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்துகிறது.

இது தொடர்பான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு 15ம் தேதி மொரீசியஸ் செல்கிறது.

சினியுக் இயக்குநர் முன் ஜாமீன் மனு:

இந் நிலையில் சினியுக் இயக்குநர் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சாஹித் பல்வாவின் டி.பி. ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணம் சினியுக் நிறுவனம் வழியாகக் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளை மறுதினம் இவரும் கனிமொழியும், சரத் குமாரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர்களை சிபிஐ கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி கரீம் மொரானி மனு தாக்கல் செய்துள்ளார்.

கத்திரி வெயிலில் இருந்து காத்துக்கொள்வோம்

Sun

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று ( 4 – ம் தேதி) தொடங்கி 
வரும் 29 - ம் தேதி வரை நீடிக்கவுள்ளது.


அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.

இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை 
வழிபடுகின்றனர்.

சூரிய பகவான்

சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் 
உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை 
அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல்நாளில் அசுவினியில் 
நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் 
தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில் 
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் 
அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான். இவர் நெருப்பு ரூபமாய் 
காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் 
பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை 
உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை 
அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார்.

இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க 
வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும், விடாது மழை 
பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.

காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர், 
அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை 
சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார். அப்போது 
அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..

அக்னி ரூபானை வழிபடுவோம்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும் 
சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட 
வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

ஐபிஎல்லில் மீண்டும் கங்குலி! புனே அணிக்காக விளையாடுகிறார்



ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாடவுள்ளார் கங்குலி.


இந்த முறை ஐபிஎல் ஏலத்தின் போது எல்லா அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார் சௌரவ் கங்குலி. அவருடைய ஐபிஎல் சகாப்தம் முடிந்துவிட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனால் தற்போது மீண்டும் கங்குலிக்கு ஐபிஎல்லில் விளையாடுவதற்கான அழைப்பு வந்துள்ளது. புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்கள் முன்னாள் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவரான கங்குலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அணியின் சார்பில் கங்குலியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். காயமடைந்த ஆசிஷ் நெஹ்ராவுக்கு பதிலாக கங்குலி சேர்க்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இன்று இரவே அவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்றும், இன்றே அவர் அணியில் இணைவார், யுவராஜ் சிங் தலைமையில் கங்குலி விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஐபிஎல் சீஸன் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்து துவண்டு போயிருக்கு புனே அணிக்கு அனுபவம் மிக்க கங்குலி சில வழிகாட்டுதல்களைத் தருவார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Photobucket