அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், மே 30, 2011

அமைச்சரை காவு வாங்கிய லாரி பிடிபட்டது


திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாவுக்கு காரணமான லாரியை, ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். லாரியை பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, கடந்த 23ம் தேதி திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடைய கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு ரோட்டில் சென்ற போது முன்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.காரில் சென்ற டிரைவர் ஆனந்த உள்ளிட்ட ஆறு பேர் இலேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அமைச்சர் மரியம்பிச்சை சாவுக்கு காரணமான லாரி நிற்காமல் சென்று விட்டது. இதனால் அது சதித்திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மரியம்பிச்சையின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா, விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் மரியம்பிச்சையின் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

முதல்வர் உத்தரவிட்ட முதல் வழக்கு என்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஏ.டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம், டி.ஐ.ஜி., ஸ்ரீதர், எஸ்.பி., ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். லாரியைக் கண்டுபிடிக்க, விபத்து நடந்த அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சமயபுரத்தில் உள்ள வாகன வரிவசூல் மையத்தை கடந்து, சென்னையை நோக்கி சென்ற லாரிகளின் பட்டியல் போலீசாரால் எடுக்கப்பட்டது. அதில் தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்கேதப்பட்டியலில் கொண்டு வந்தனர். அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.

அதைப்பிடிக்க ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர். காலை குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர். 

ஆந்திரா மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் காசிம் ரகமதுல்லா என்பதும் தெரியவந்தது. அவரே லாரியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடியிலிருந்து, விஜயவாடாவுக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்றபோது தான் பாடாலூர் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டதும் ஏதும் பிரச்னை ஏற்படுமோ என்று நினைத்த லாரி உரிமையாளர் காசிம் ரகமதுல்லா, அதை சமர்த்தியமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு ஓட்டிச் சென்றுவிட்டார்.அங்கு ஜிப்சத்தை இறக்கிவிட்டு, லாரியை மறைத்து வைக்க கொல்கத்தா செல்லும் வழியில், ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் அந்த டாரஸ் லாரியை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட லாரியை பெரம்பலூர் கொண்டு வரவும், லாரியின் உரிமையாளரும், டிரைவருமான காசிம் ரகமதுல்லாவையும் கைது செய்து, பெரம்பலூர் கொண்டு வர சி.பி.சி.ஐ.டி., போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் சாவுக்கு காரணமான லாரி பிடிபடாமல் இருந்ததால், விபத்தில் சதி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. தற்போது லாரி பிடிபட்டுள்ளதால், அந்த சந்தேகத்துக்கான விடை விரைவில் தெரியவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Photobucket