அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

வியாழன், மே 12, 2011

பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம் : டீசல், சமையல் காஸ் தப்பியது



புதுடில்லி : ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு, இந்த வாரத்தில் எந்த நேரத்திலும் வரலாம். இருப்பினும், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்போதைக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலை காரணம் காட்டி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிவந்தன. விலையை உயர்த்தாததால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வந்தன. பெட்ரோல் விலையை சர்வதேச விலைக்கு நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த புதிய முறை மூலம், ஆறு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பெட்ரோல் விலையை உயர்த்துவது பற்றி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசின் ஆலோசனையை எதிர்பார்த்தன.

மேலும், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை பொறுத்தமட்டில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருந்ததால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.மேற்கு வங்கத்தில் நேற்று கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இத்துடன் ஓட்டுப்பதிவு முடிந்ததால், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளையோ, நாளை மறுநாளோ அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.

டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது பற்றி முடிவு செய்வதற்காக அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு இன்று கூடுவதாக இருந்தது. ஆனால், இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எந்த தேதியில் இந்த கூட்டம் நடைபெறும் என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவிக்கவில்லை. அமைச்சர்கள் குழு கூடி, டீசல் விலையை லிட்டருக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வரையும், காஸ் சிலிண்டர் விலையைரூ.25 வரையும் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.பெட்ரோல் விலை: பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்படும் என தெரிகிறது. சர்வதேச விலையோடு ஒப்பிடும் போது, ரூ.8.50 விலை உயர்த்தவேண்டி வருவதாகவும், இருப்பினும் இந்த சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் ஏற்றுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Photobucket