அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், அக்டோபர் 24, 2011

இன்று கனிமொழி மனு: ஜாமீன் கிடைக்குமா?





புது தில்லி, அக். 23: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கடந்த 5 மாதங்களாகச் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றத்துக்கு நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் தீபாவளிக்கு முன்பு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கனிமொழி கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. 2ஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்குப் பிறகு, ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 16-ம் தேதி அவர் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதைப் போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், கரீம் மொரானி, சுரேந்தர் பிப்பாரா உள்பட 7 பேரின் ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.
கனிமொழி பெண் என்பதாலும் அவர் தனது குழந்தையைக் கவனித்து கொள்ள வேண்டியுள்ளது என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சரத்குமார், வயதான தாயாரையும் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கரீம் மொரானி, சுரேந்தர் பிப்பாரா ஆகியோர் தங்களது வயதைக் காரணம் காட்டி ஜாமீன் கோரியுள்ளனர்.
ஆனால், இவர்கள் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்பதால் ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது சனிக்கிழமை குற்றப் பதிவு செய்யப்பட்டது.
"குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த பின்னர் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதற்கு சி.பி.ஐ. தரப்பு பதில் தாக்கல் செய்ய சில நாள்கள் ஆகும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்காக நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை.
இதனால் தீபாவளிக்கு முன்பாக கனிமொழி ஜாமீன் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தில்லியில் கருணாநிதி முகாம்


கனிமொழியைச் சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு புது தில்லிக்கு வந்தார். பிரதமர், சோனியா காந்தி, கனிமொழி ஆகியோரைச் சந்தித்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் புறப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதால் அவர் தனது தில்லிப் பயணத்தை நீட்டித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டார். திங்கள்கிழமை மாலை சென்னைக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

Photobucket