அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

வியாழன், ஏப்ரல் 11, 2013

இந்த ஆண்டு வெயில் எப்படி: வானிலை ஆய்வு மையம் விளக்கம்


பருவநிலை மாற்றம், நகர மயமாதல், வாகனங்களின் பெருக்கம், மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களால், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வெயில் அதிகமாக சுட்டெரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பொய்த்தது பருவ மழை:


வடகிழக்கு பருவமழை சீசனில் கிடைக்க வேண்டிய சராசரியை விட, மழை பொழிவு குறைந்தது. சீசன் முடிந்த பின், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், பல மாவட்டங்களில் மழை பெய்தது. அதே போல, சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த சீசனில், கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இது, ஊட்டி, கொடைக்கானல், சிம்லா போன்ற தட்பவெப்ப நிலையை நினைவுப்படுத்தியது. ஆண்டுதோறும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரை, மிதமான தட்பவெப்பம் நிலவுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்திலேயே, வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது. வழக்கமாக, கோடை வெயில், ஏப்ரல் முதல் வாரம் துவங்கும். இந்த ஆண்டு பருவ காற்று, மார்ச் 15ம் தேதியுடன் முற்றுப் பெற்று விட்டதால், கோடை வெயிலின் தாக்கம், உள்மாவட்டங்களில் அதிகமாக உணரப்பட்டது.இதன் காரணமாக, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கரூர் பரமாத்தி, தர்மபுரி ஆகிய ஆறு மாவட்டங்களில், தினமும், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு, கடலோர மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில், வெயில் அதிகமாக உள்ளது.

இப்பவே...:


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கடல் காற்று, தென்மேற்கில் இருந்து, காலை, 9:00 மணி முதல் வீசுவதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டாலும், வெப்பத்தின் அளவு, இயல்புநிலையை தாண்டவில்லை. சென்னை நுங்கம்பாக்கத்தில் இயல்பான வெப்ப அளவு, 91 டிகிரி பாரன்ஹீட்; மீனம்பாக்கத்தில், 93 டிகிரி. கடந்த, ஒன்றாம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில், 93; மீனம்பாக்கத்தில், 95 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. மார்ச் மாதத்தில், இயல்பான வெப்பநிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் 90; மீனம்பாக்கத்தில், 92. மார்ச், 23ம் தேதி அதிகபட்சமாக, சென்னை, நுங்கம்பாக்கத்தில், 95; மீனம்பாக்கத்தில், 97 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. "உலக வெப்பமயமாதல், வாகனங்களின் பெருக்கம், மரங்களை வெட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களால், இந்த ஆண்டு வெயில் அதிகமாக சுட்டெரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வரலாம்:


இது குறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ராஜ் கூறியதாவது:
வரும், 20ம் தேதி முதல், தென்மேற்கு திசையிலிருந்து கடல் காற்று வீசும். காலை, 11:00 மணி முதல், 12:00 மணிக்குள் கடல் காற்று வீசுவது உறுதியானால், வெப்பத்தின் அளவு குறைந்து விடும். சூரியன் தலைக்கு மேல், செங்குத்தாக வரும்போது வெப்பத்தின் அளவு அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் பாதுகாக்க, கதர் ஆடைகளை அணியலாம். வெயிலில் வெளியே போனால், குடையை பயன்படுத்துவது நல்லது. ஏப்ரல், மே மாதங்களில், சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை விட உள்மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகரில் கடல் காற்று வீசுவதால், 15 முதல் 20 கி.மீ., தூரம் வரை, அதன் தாக்கம் இருக்கும். உள்மாவட்டங்களில் தினமும், 1 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தின் அளவு கூடும். சென்னையில், மே, 15ம் தேதி முதல் வெப்பம் அதிகமாக இருக்கும்.கோடை காலத்தில், 104 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் எட்டினால், "ஹாட் டேஸ் - அதிவெப்ப நாட்கள்' என, அழைக்கப்படும். இந்த அதிவெப்ப நாட்கள், மே, ஜூன் வரை நீடிக்கும். வெப்பத்தின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதை, மூன்று நாட்களுக்கு மட்டுமே, முன்கூட்டி சொல்லப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Photobucket