அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

சனி, ஜனவரி 11, 2014

60 ஆண்டுகளாக குளித்தே அறியாத ஈரானின் ‘கப்பு மனிதர்’

60 ஆண்டுகளாக குளித்தே அறியாத ஈரானின் ‘கப்பு மனிதர்’
டெஹ்ரான், ஜன. 11-

தினந்தோறும் குளிக்காவிட்டால் நம்மில் பலருக்கு தங்களைப் பற்றியே அருவெறுப்புணர்வு தோன்றிவிடும். இன்னும் சிலருக்கு காலை, மாலை இரு வேளையும் குளிக்கவில்லை என்றால் எதையோ பறிகொடுத்தது போல் ஆகிவிடும்.

உலகின் மனித நியதி இவ்வாறிருக்க, ஈரான் நாட்டில் வாழும் 80 வயது முதியவர், கடந்த 60 ஆண்டுகளாக குளிப்பதற்கு கெடு சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தி வந்துள்ளார் என்ற விசித்திர செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஈரானின் தெற்கு மாகாணமான ஃபர்ஸ் பகுதியில் உள்ள டெஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர், அமோவ் ஹாஜி. இளம் வயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

நீராவியால் இயங்கும் ரெயிலின் டிரைவரைப் போல் உடல் முழுவதும் பட்டைப்பட்டையாய் புழுதி மண்ணுடனும், கன்னங்கரேலென்ற அழுக்கு துணிகளுடனும் அந்த கிராமத்திலேயே சுற்றிச்சுற்றிவரும் இவரை மடக்கிப்பிடித்து குளிப்பாட்ட பலர் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல், விரையத்தில் தான் முடிந்துள்ளது.

'செயின் ஸ்மோக்கர்’ ஆன இவர் விரும்பி சாப்பிடுவது என்ன தெரியுமா? கெட்டுப்போன இறைச்சியும், செத்துக் கிடக்கும் உயிரினங்களின் மாமிசமும்தான்.

தனது 'ஸ்மோக்கிங் பைப்'பில் (புகை பிடிக்க பயன்படுத்தும் உறிஞ்சு குழல்) புகையிலைக்கு பதிலாக விலங்குகளின் சாணத்தை அடைத்து, 10 நிமிடத்திற்கு ஒரு முறையாவது பைப்பை பற்றவைத்து ‘தம்’ அடிக்காவிட்டால் தலை வெடித்து விடுவது போல் அமோவ் ஹாஜி துடித்துப்போய் விடுகிறார்.

வானமே கூரையாய்-கட்டாந்தரையே பஞ்சனையாக தனது காலத்தை ஓட்டிவரும் இவருக்கு உரிமையான உபயோகப் பொருட்கள் என்று ஏதுமில்லாததால் ‘மடியில கனமில்லே.. வழியில பயமில்லே’ என்ற சித்தாந்தத்தின்படி, பயமறியாத இளங்கன்றாக கடந்த 60 ஆண்டுகளாக குளித்தே அறியாமல் இவர் டெஜ்கா கிராமத்தில் வலம் வருகிறார்.

இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் வரை 66 வயதான ஒரு நபர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது அமோவ் ஹாஜி முறியடித்து விட்டார். அதுசரி.., முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர் யார் என்று தெரிந்தால், நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா..? வருத்தப்படுவீர்களா? அதிர்சியடைவீர்களா..? என்பதை யூகிக்க ஒரு சிலரால் மட்டும்தான் முடியும்.

அந்த மகத்தான முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவர்தான். 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை' என 1974-ம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட இவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.

அதற்கு பிறகாவது அவர் குளித்தாரா? இல்லையா? என்பது தொடர்பாக இவரைப்பற்றி உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. 

கருத்துகள் இல்லை:

Photobucket