அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், நவம்பர் 07, 2011

காற்றழுத்தம் வலுவிழந்தது- மழை குறைந்தது- வெயில் அடிக்க ஆரம்பித்தது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாட்களாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது சற்று மெலிந்த நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், விழுப்புரத்தில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கள்ளகுறிச்சியில் 6 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சீபுரம், தேவக்கோட்டை ஆகிய பகுதியில் தலா 5 செ.மீ. மழையும், சென்னை விமானநிலையம், பொன்னேரி, சோழவரம், கடலூர், செய்யார், தர்மபுரி உள்ளிட்ட பகுதியில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தமட்டில், நேற்று முதல் மழை காணப்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான தூறல் மழை காணப்பட்டது.

இருப்பினும் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

அதேபோல காவிரி டெல்டாப் பகுதிகளிலும், வைகை பாசனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை, வைகை அணைக்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து காணப்படுகிறது. வைகை அணையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழையில் இதுவரை இயல்பை விட கூடுதலாகவே மழை கிடைத்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், முதல் கட்ட மழையிலேயே தமிழகத்தின் கிட்டத்தட்ட அத்தனை சாலைகளுமே சேதமடைந்து மக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளன. அடுத்த மழை வருவதற்குள் சேதமடைந்த சாலைகளை ஓரளவேனும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Photobucket