அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

வியாழன், நவம்பர் 10, 2011

இந்தியா அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்


புதுடில்லி: டில்லி டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய சச்சின், லட்சுமண் அரைசதம் கடந்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 304, இந்தியா 209 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் எடுத்தது. பின், 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

சதம் நழுவல்: நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி. எட்வர்ட்ஸ் "வேகத்தில்' டிராவிட் (31) போல்டானார். அடுத்து வந்த அனுபவ வீரர் லட்சுமணுடன் இணைந்த சச்சின், டெஸ்ட் அரங்கில் தனது 62வது அரைசதம் அடித்தார். இவர், 76 ரன்கள் (10 பவுண்டரி) எடுத்திருந்த போது, தேவேந்திர பிஷூ சுழலில் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார்.

லட்சுமண் அரைசதம்: அடுத்து வந்த யுவராஜுடன் இணைந்த லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 55வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் சிங் (18), டேரன் சமி பந்தில் "கிளீன்' போல்டானார். பின், கேப்டன் தோனியுடன் இணைந்த லட்சுமண் ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லட்சுமண் (58), தோனி (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா முன்னிலை: இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. சுழலில் அசத்திய தமிழக வீரர் அஷ்வின் (9 விக்கெட்), ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வரும் 14ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

திருமணப் பரிசு: அஷ்வின், தனது பள்ளிப் பருவ தோழியான பிரீத்தி நாராயணன் என்பவரை வரும் 13ம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில், ""அறிமுகமான முதல் டெஸ்டில், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி சாதிப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆட்ட நாயகன் விருதை, எனது திருமணப் பரிசாக கருதுகிறேன்,'' என்றார்.

உள்ளூரில் ஆதிக்கம்: சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்கிறது. கடந்த 2008ல் இருந்து சொந்த மண்ணில் விளையாடிய 20 டெஸ்டில், இரண்டில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டியில் வெற்றி கண்ட இந்திய அணி, ஏழு போட்டியை "டிரா' செய்துள்ளது.

மூன்றாவது இந்தியர்: டில்லி டெஸ்டில், ஆட்ட நாயகன் விருது வென்ற தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், அறிமுக டெஸ்டில் இவ்விருது வென்ற 3வது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக பிரவீண் ஆம்ரே (எதிர்-தென் ஆப்ரிக்கா, 1992), ஆர்.பி. சிங் (எதிர்-பாகிஸ்தான், 2006) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

சிக்கல் தரும் "ஸ்பின்னர்கள்': வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி கூறுகையில்,"" இந்திய சுழற்பந்துவீச்சு தான் பிரச்னையாக உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் இதனை சமாளித்து ரன் சேர்ப்பது பற்றி கூடுதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,''என்றார்.

தோனி அதிருப்தி: இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ""முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறினர். முன்னிலை பெற்றிருந்தால், தொடரை சிறப்பாக துவக்கிய திருப்தி கிடைத்திருக்கும். ஆனாலும் இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொண்டதால், சுலபமாக "சேஸ்' செய்து வெற்றி பெற முடிந்தது. 2 இன்னிங்சிலும் சேவக், காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. முதல் இன்னிங்சில் சுழலில் அசத்திய பிரக்யான் ஓஜா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இமாலய ஸ்கோரை தடுத்தார். 2வது இன்னிங்சில் சுழல் ஜாலம் காட்டிய அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வலுவான முன்னிலைக்கு முட்டுக்கட்டை போட்டார்,''என்றார்.
சச்சின் மீண்டும் ஏமாற்றம்: சச்சினின் 100வது சதத்தை காண டில்லி மைதானத்தில் சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். ஆனால், 76 ரன்களில் பிஷூ சுழலில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். இதன் மூலம் 24 ரன்களில் 100வது சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறை இழந்தார். இவர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில் தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். அதன்பின் இவர் விளையாடிய நான்கு ஒருநாள் (2, 53, 85, 18 ரன்கள்), ஐந்து டெஸ்ட் (34, 12, 16, 56, 1, 40, 23, 91, 7, 76 ரன்கள்) போட்டியில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவிக்கிறார்.

தொடரும் சாதனை: இரண்டாவது இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் (53 இன்னிங்ஸ்) நான்காவது இன்னிங்சில் விளையாடிய சச்சின், 3 சதம், 7 அரைசதம் உட்பட மொத்தம் 1515 ரன்கள் எடுத்தார். அடுத்த 2 இடங்களில் இந்தியாவின் டிராவிட் (1507 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் லாரா (1440 ரன்கள்) உள்ளனர்.

* நேற்று 62வது அரைசதத்தை பதிவு செய்த சச்சின், டெஸ்ட் அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் சகவீரர் டிராவிட்டை (61 அரைசதம்) பின்தள்ளி 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பார்டர் (63) உள்ளார்.

கருத்துகள் இல்லை:

Photobucket