அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

வெள்ளி, நவம்பர் 11, 2011

உறவு மேம்பட இந்தியா - பாகிஸ்தான் உறுதி

அட்டு (மாலத்தீவு), நவ.10: உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதிபூண்டுள்ளன. "சார்க்' மாநாட்டில் நடைபெற்ற பிரதமர் மன்மோகன் சிங் - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி சந்திப்பின் போது இந்த உறுதி மேற்கொள்ளப்பட்டது.
17-வது "சார்க்' உச்சி மாநாடு மாலத்தீவுகளின் அட்டு நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, இலங்கை அதிபர் ராஜபட்ச உள்பட 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும், கிலானியும் சந்தித்துப் பேசினர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருநாடுகளிடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
புதிய அத்தியாயம் எழுதுவோம்: கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், இருநாடுகளிடையிலான வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை எழுத நேரம் பிறந்து விட்டதாகத் தெரிவித்தார். இனிவரும் காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் உறவு மேலும் சிறப்பாக இருக்கும். இரு தரப்பு பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இருவருமே முடிவு செய்துள்ளோம் என்றார்.
"அமைதியே உருவானவர் கிலானி': கிலானியை அமைதியே உருவான மனிதர் என்றே நான் எப்போது மதிக்கிறேன். எரிச்சலூட்டும் வார்த்தைகளைப் பேசியும், மாறிமாறி குற்றம்சாட்டியும் இருநாடுகளும் ஏற்கெனவே பெருமளவில் காலத்தை வீணடித்து விட்டன. இனி இதுபோன்று நடைபெறாது. உறவை வலுப்படுத்த கிலானி காட்டும் ஆர்வம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
வெளிப்படையாகப் பேசினோம்- கிலானி: இருநாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயங்கள் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்து இருவருமே வெளிப்படையாகப் பேசினோம். பயங்கரவாதம், சியாச்சின் பிரச்னை, வர்த்தக ஒப்பந்தம், நதிநீர் பகிர்வு என நீங்கள் கூறும் அனைத்து விஷயங்களையும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தேன்.
அடுத்த சுற்று பேச்சு இதைவிடவும் பயனளிப்பதாக இருக்கும் என்று கிலானி தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானுக்கு நிரந்தரமற்ற உறுப்பு நாடு அந்தஸ்து கிடைக்க ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு கிலானி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மிகவும் வேண்டப்பட்ட நாடு: இருதரப்பு வர்த்தகத்தில் இருநாடுகளும் மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அடிப்படையில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே விரும்பத்தக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். 2016-ம் ஆண்டு முதல் இருநாடுகளிடையே சுங்கவரி இல்லாமல் பொருள்களின் பரிமாற்றம் நடக்கும்.
முன்னதாக 15 ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகத்தில் மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற தகுதியை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. பாகிஸ்தான் இப்போதுதான் இந்தியாவை வர்த்தகத்தில் விரும்பத்தக்க நாடாக ஏற்றுக் கொண்டுள்ளது.
விசா கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா - பாகிஸ்தான் இடையே விசா வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் 2005-ம் ஆண்டு முதல் இக்குழு செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் இப்போதைய சந்திப்பின்போது இந்த விஷயத்திலும் நல்ல முடிவு எடுக்கப்பட்டது. விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

Photobucket